- புகைப்படங்கள்

அழிந்து வரும் அரிய வகைப் பறவை இனங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள, சிட்டுக்குருவிகளை புதுவையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் தனது வீட்டில் ஆர்வமுடன் வளர்த்து வருகிறார்.
பறவை இனங்களில் மிகச் சிறிதாகவும், அனைவரையும் ஈர்க்கும் ஒன்றாக இருப்பது சிட்டுக்குருவியாகும். பொதுவாக மனிதர்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளிலும், வயல்வெளிகளிலும் சிட்டுக் குருவிகள் அதிகம் காணப்படும்.
ஆனால் தற்போது பெருகிவிட்ட நகரமயமாக்கலாலும், வயல் வெளிகள் வீட்டு மனைகளாக்கப்பட்டு விட்டதாலும், சிட்டுக்குருவிகளுக்கான வாழ்விடம், இரை தேடுமிடங்கள் சுருங்கி விட்டன.
செல்போன் கோபுர எமன்கள்: தற்போது தகவல் தொழில்நுட்ப சாதனமான செல்போன்கள் பெருகி விட்ட நிலையில், நகரங்கள் மட்டும் இல்லாது கிராமப்புறங்களிலும் செல்போன் கோபுரங்கள் அதிகளவில் நிறுவப்பட்டுள்ளன.
இவற்றில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சால் சிட்டுக்குருவி இனம் தொடர்ந்து அழியும் நிலை உருவாகி உள்ளது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் சிட்டுக்குருவிகள் அருகி வருவதால், இதனை அழிந்து வரும் பறவை இனங்களில் ஒன்றாக அரசு வகைப்படுத்தி
உள்ளது.
மார்ச் 20 சிட்டுக்குருவிகள் தினம்: சிட்டுக்குருவிகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மார்ச் 20 ஆம் தேதி உலக சிட்டுக் குருவி தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய இயற்கை பாதுகாப்பு சமூகம் மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்பு இணைந்து இம்முயற்சியை தொடங்கி உள்ளன. இதன் மூலம் சிட்டுக் குருவிகள் மற்றும் அழிந்து வரும் இதர பறவை இனங்களை காப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. முதல் உலக சிட்டுக்குருவி தினம் கடந்த 2010ஆம் ஆண்டு கடைப்பிடிக்கப்பட்டது.
சிட்டுக் குருவிகளுக்கு பாதுகாப்பு: புதுச்சேரி வெங்கடேஸ்வரா நகர் 4 ஆவது குறுக்கு தெருவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நகராட்சி ஆணையர் குப்புசாமி. இவரது மனைவி குமாரி, நூலகத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் சிட்டுக்குருவிகளை தனது குழந்தைகள் போல் பாதுகாத்து அடைக்கலம் அளித்து வருகிறார்.
இதுகுறித்து குமாரி கூறியது: அழிந்து வரும் சிட்டுக்குருவிகளை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் கடந்த 2004 ஆம் ஆண்டிலேயே ஏற்பட்டது. அதுமுதல் எங்கள் வீட்டில் சிறிய பானைகள், பெட்டிகளை ஆங்காங்கே வைத்து சிட்டுக்குருவிகள் பாதுகாப்பாக வசிக்க ஏற்பாடு செய்தோம்.
தினந்தோறும் காலையில் கம்பு, தினை போன்றவற்றை, சிட்டுக்குருவிகள் உண்பதற்காக வைப்போம்.
காலையில் 7 மணிக்கு வெளியே செல்லும் சிட்டுக்குருவிகள், மாலை 6 மணிக்கு வந்து விடுகின்றன. அக்கம்பக்கத்தினரும் சிட்டுக்குருவிகள் வளர்ப்புக்கு ஊக்கம் தருகின்றனர்.
அரசு மருத்துவமனையில் இருதய நோய் நிபுணராக உள்ள என் மகன் சந்தான கிருஷ்ணனும் சிட்டுக்குருவிகள் பராமரிப்புக்கு உதவி வருகிறார்.
சுற்றுச்சூழலை காக்கவும், அழிந்து வரும் சிட்டுக்குருவிகளை பாதுகாப்பது தொடர்பாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன் என்றார் குமாரி.
I THANKING FOR 

0 comments:
Post a Comment