Friday, 25 July 2014

தர்மபுரியில் பேசும் குப்பைத் தொட்டி அறிமுகம்





தர்மபுரியில் பேசும் குப்பைத் தொட்டி அறிமுகம்




தர்மபுரி : தர்மபுரியில் இன்று மாலை 5 மணிக்கு கோட்டை ஆர்.கே., திருமண மண்டப வளாகத்தில் இந்தியன் அறிவியல் கல்வி அறக்கட்டளை சார்பில் பேசும் குப்பைத் தொட்டி அறிமுகம் நடக்கிறது.
மதுரை மேலூரைச் சேர்ந்தவர் ஜெயபாண்டியன். இவர், தர்மபுரியில் மாணவர்களுக்காக இந்தியன் அறிவியல் கல்வி அறக்கட்டளையை உருவாக்கியுள்ளார். அறக்கட்டளை மூலம் எளிய பொருட்கள் கொண்டு, பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளை மாணவர்களே எளிதில் செய்ய முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் இதுவரையில் ரோபோ துப்பாக்கி, மிதக்கும் படகு, வாட்டர் படகுகள் உள்ளிட்ட 40 வகையான கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்துள்ளார். அறக்கட்டளை மூலம் தர்மபுரியில் மாணவர்களுக்கு அறிவியல் மியூசியம் அமைத்து இந்த கண்டுபிடிப்புகளை மாணவர்கள் பார்வையிட்டு, இதே போன்று புதிய கண்டுபிடிப்புகளை அவர்களே எளிய பொருட்கள் மூலம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் மியூசியம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இவரது முயற்சிக்கு உதவும் உள்ளங்கள் தலைவர் மாணிக்கம் மூலம் தர்மபுரியை அடுத்த நல்லம்பள்ளி யூனியன் நாகர்கூடல் புவிதம் கல்வி மைய நிர்வாக இயக்குனர் மீனாட்சி உமேஷ் கல்வி மையத்தின் நிலத்தை மியூசியம் அமைக்க கொடுத்துள்ளார். இந்த மியூசியத்தில், 200 வகையான புதிய கண்டுபிடிப்புகளை வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
அறக்கட்ளை சார்பில், பேசும் குப்பைத் தொட்டியை ஜெயபாண்டியன் இன்று அறிமுகம் செய்கிறார். இந்த தொட்டியை பூங்காக்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைப்பதோடு, சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஒலி அமைப்பு மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொட்டியை வடிவமைத்துள்ளார். தற்போது, இரண்டடி கொண்ட, "டஸ்ட் பின்னில்' மாதிரியாக அறிமுகம் செய்துள்ள இந்த தொட்டி, நம் தேவைக்கு ஏற்ப பெரிய தொட்டிகளாவும் பயன்படுத்த முடியும். இந்த தொட்டி உள்ள இடத்தில் இருந்து 20 மீ., தொலைவில் மனிதர்கள் செல்லும் போது, திடீரென மூடப்பட்டிருக்கும் தொட்டி திறக்கப்பட்டு, "குப்பைகளை தொட்டியில் போடுங்கள்; வெளியில் போடாதீர்கள்', "உங்கள் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்து ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டுங்கள்' உள்ளிட்ட சுகாதாரம் குறித்த வாசகங்கள் ஒலிக்கிறது. 20 மீ., தொலைவில் இருந்த நாம் விலகி விட்டால், தொட்டி தானாக மூடிவிடுவதோடு, விழிப்புணர்வு ஒலியும் அடங்கி விடும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.
சாதாரண பிளாஸ்டிக், "டஸ்ட் பின்னில்' சொல்நடவால்வு (மின் மாற்றி) மூலம், 20 மீ., தொலைவில் மனிதன் உள்ளிட்ட உயிரூட்டமுள்ளவர்கள் நடந்துச் செல்லும் போது, நம் உடலில் இருந்து வெளியேறும் மின் ஒலி அலைகள் மூலம் கவரப்பட்டு, தொட்டி தானாக திறக்கிறது. இதே போன்று பஸ் ஸ்டாண்ட் மற்றும் திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கும் இடங்களில் இதை பொருத்தினால், அந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் வந்தவுடன் எச்சரிக்கை அறிவிப்பு ஒலிப்பது போலவும் இதை பயன்படுத்தலாம். வனப்பகுதியில் காட்டு விலங்குகள் விவசாய நிலத்தில் நுழையாமல் இருக்க இது போன்று பல்வேறு பயங்கர சத்தம் (பட்டாசு வெடிக்கும் சத்தம், முரசு அடிக்கும் சத்தம்) எழுப்பும் வகையில் பதிவு செய்து பயன்படுத்தலாம்.
இது குறித்து ஜெயபாண்டியன் கூறியதாவது: அறக்கட்டளை மூலம் மாணவர்களுக்கு அமைக்கப்படும் மியூசியத்தில் உள்ள கண்டுபிடிப்புகளை மாணவர்கள் நேரில் பார்வையிட்டு, அதன் செய்முறை விளக்கங்களை அறிந்து கொண்டு, தாங்களே இது போன்று வேறு வடிவங்களில் செய்ய முயற்சிகள் செய்யலாம். மியூசியத்தில் இடம் பெறும் 200 வகையான கண்டுபிடிப்பு குறித்த அனைத்து விவரங்களும் மாணவர்களுக்கு விளக்கி அவர்களை புதிய கண்டுபிடிப்புக்கு தூண்டுதலாக இருக்கவே இந்த மியூசியத்துக்கான பணி நடந்து வருகிறது. அறக்கட்டளை மூலம் புதிய கண்டுபிடிப்புகளை மியூசியத்தில் இடம் பெற விரும்புவோர், 96982 - 48008 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு ஜெயபாண்டியன் கூறினார்.

0 comments:

Post a Comment